இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் ஜூலை 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் அது QR குறியீடு மற்றும் வாகனங்களின் இலக்கத் தகடுகளில் உள்ள கடைசி இலக்கத்தின் பிரகாரம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் (FSOA) தலைவர் குமார ராஜபக்ஷ இன்று இதனை தெரிவித்துள்ளார். எனவே, அன்றைய தினம் முதல் எரிபொருள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இராணுவத்தால் வழங்கப்படும் டோக்கன்கள் 21ம் திகதி முதல் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். QR குறியீடு முறையின் கீழ், வாகன உரிமையாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு எரிபொருள் கிடைக்கும். கோட்டா முறையில் எரிபொருள் வழங்கப்படும்.
அதன்படி, இலங்கையில் உள்ள அனைத்து பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வாகனங்களுக்கு ஒதுக்கீடு முறையின் கீழ் எரிபொருள் நிரப்பப்படும்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்
QR குறியீட்டைப் பெறுபவர் அதைச் சமர்ப்பித்து எந்த இடத்திலிருந்தும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும். இது ஒரு நீண்ட கால திட்டமாகும், எனவே தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என்று தலைவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டின் படி நிர்ணயிக்கப்பட்ட அளவு எரிபொருள் விநியோகிக்கப்படும். இதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்கள் வேறு எந்த வாகனத்திற்கும் எரிபொருளை வழங்காது.
நாடு முழுவதும் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களில் உள்ள பணியாளர்கள் தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளிடமிருந்து இந்த QR குறியீட்டை இயக்குவதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை வழங்க முயற்சிக்கிறோம், ஆனால் சந்தையில் அதற்கு பற்றாக்குறை உள்ளது. எனினும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஜூலை 21ம் திகதி முதல் சேவை வழங்கவுள்ளோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.