நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் தெரிவு செய்திருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி என தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வாழ்த்தி அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதிய ஜனாதிபதி முதிர்ந்த அரசியல் அனுபவமுடையவர்
“முதிர்ந்த அரசியல் அனுபவமுள்ள புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல பாதைகளை கடந்து வந்தவர். அரசியலில் எத்தனை சவால்களை எதிர்கொள்ள நேர்ந்த போதும், ஒருநாளும் அவர் ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்ததில்லை.
முக்கியமான காலகட்டத்தில் பல தியாகங்கள் செய்து நாட்டையும், மக்களையும் பாதுகாத்த பெருமை அவருக்குண்டு. நெருக்கடியான நேரங்களில் கூட துணிந்து நின்று பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட அவரது அரசியல் முதிர்ச்சியையே காட்டுகிறது.
வாதத்திறமையும், வாக்குறுதி மீறாத நேர்மையும் தான் அவரை இந்தளவு உயர்த்தியிருக்கிறது.
புதிய ஜனாதிபதியின் சர்வதேச செல்வாக்கு
சர்வதேசத்தில் அவருக்குள்ள செல்வாக்கினால் நமது நாட்டு நெருக்கடிகளை தீர்ப்பதற்கான வியூகங்களை வகுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, நாடாளுமன்றத்துக்கும் உள்ளது. இந்த நம்பிக்கை தான் அவரை இன்றைய வாக்கெடுப்பில் வெற்றியீட்ட வைத்திருக்கிறது.
தனது வெற்றியை தொடர்ந்து, சகல கட்சிகளையும் ஒத்துழைக்குமாறு புதிய ஜனாதிபதி அழைத்திருப்பது ஜனநாயகவாதிக்குள்ள பண்பையே எடுத்துக்காட்டுகிறது. எனவே, இனியாவது அரசியல் பேதங்களை மறந்து, நமது நாட்டு நெருக்கடியை தீர்க்க சகலரும் புதிய ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.