கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாகப் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்பட்ட மரக்கறிகளின் அளவு 65 வீதமாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் மிக அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, கடும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியதுடன், பயிர்கள் அழிவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தநிலையில், நுவரெலியா மத்திய சந்தை மற்றும் வீதியோர விற்பனை நிலையங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
நுவரெலியா மத்திய சந்தைக்கு வரும் பெரும்பாலான பொது மக்கள் விலை அதிகரிப்பு காரணமாக மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தாம் பாரியளவிலான நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம், மழை காரணமாக போதுமான விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியாத விவசாயிகள், தமக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.