ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் பணியாற்றுவதற்கு 20-25 பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஜனாதிபதி நேற்று(20) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
புதிய பிரதமர் தொடர்பில் எதிர்பார்ப்பு
இதன்படி, இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாக தெரியவருவதோடு அத்துடன் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சியில் இருந்து எவரும் பிரதமர் பதவியை ஏற்க தயாராக இல்லையென்றால், இரகசிய வாக்கெடுப்பில், விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும்.
அரசியலமைப்பின் படி, அமைச்சரவையின் அளவு 30 ஐ தாண்டக்கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
விவசாயிக்களுக்கான வசதி
இதேவேளை புதிய அரசாங்கம் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் மற்றும் விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான உரங்களை எதிர்வரும் பருவத்தில் சீராக வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட நிதி உதவியை பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன், மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.