கடந்த 18-ம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் 22ந் தேதி எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.
இதையடுத்து நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொள்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறும் விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, முர்முவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும். இதன்பிறகு அவர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்த உள்ளார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்கும் திரவுபதி முர்மு, நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர், 2-வது பெண் குடியரசுத் தலைவர் உள்பட பல்வேறு பெருமைகளை பெறுகிறார்.