கனடாவுக்குச் சென்ற இந்தியப்பெண் ஒருவரின் கணவருடைய விசா நிராகரிக்கப்பட்டதால் அவரது கணவர் வீட்டார் அவரைத் துன்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பஞ்சாபிலுள்ள Moga மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்பிரீத் (Jaspreet Kaur, 28) என்ற இளம்பெண்ணை அவரது கணவர் வீட்டார், மாணவர் விசாவில் கனடாவுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.
அவர் கனடா சென்றதும் அவரது கணவரான குர்மீத் (Gurmeet Singh) ஐயும் கனடாவுக்கு அழைத்துக்கொள்வது அவர்கள் திட்டம். ஆனால், தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக குர்மீத்தின் விசா மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கணவர் வீட்டார் துன்புறுத்தியதால் தற்கொலை
அதன் பின் ஹஸ்பிரீத்தின் கணவர் வீட்டாருடைய நடவடிக்கைகள் தலைகீழாக மாறியுள்ளன. உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு ஜஸ்பிரீத்தை வற்புறுத்திய அவர்கள், அவர் தனது பெற்றோரிடமிருந்து 35 இலட்ச ரூபாய் வாங்கிவரவேண்டுமென அவரை வற்புறுத்தியுள்ளார்கள்.
அந்த பணத்தை வைத்து தம்பதியர் ஸ்பெயினுக்குச் செல்லலாம் என்றும், இலையென்றால் விவாகரத்துக்கு சம்மதிக்குமாறும் அவர்கள் ஜஸ்பிரீத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள்.
கனடாவின் பிராம்ப்டனில் வாழ்ந்துவந்த ஜஸ்பிரீத், இம்மாதம் 21ஆம் திகதி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஜஸ்பிரீத்தின் கணவர் வீட்டார் துன்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என குற்றம் சாட்டியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.
ஜஸ்பிரீத்தின் சகோதரரான ரஜ்வீந்தர் (Rajwinder Singh Khai), தன் சகோதரியின் உடல் இந்தியா வருவதற்காக காத்திருப்பதாகவும், அதற்குப் பின் பொலிஸாரிடம் இந்த விடயம் தொடர்பாக புகாரளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.