கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்த நிலையில் கொலையாளியை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் வான்கூவர் நகரிலிருக்கும் சூதாட்ட விடுதி ஒன்றில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.
மூன்று மணி நேரம் கழித்து வீடற்றோருக்கான விடுதியில் ஒருவரை சுட்டுக் கொன்றார். பின் அதிகாலையில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் படுத்திருந்தவரையும் சுட்டு கொலை செய்துள்ளார்.
அவ்வழியே சென்ற ஒருவரை சுட்டதில், அவரது காலில் குண்டு பாய்ந்தது.
இந்த தொடர் துப்பாக்கிச்சூடு தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கொலையாளியை கண்டு பிடித்து சரண் அடையும்படி கூறினர். அதற்கு அவர் மறுத்து பொலிஸாரை நோக்கி சுட முயற்சி செய்தனர். அதற்குள் பொலிஸார் சுதாரித்து, கொலையாளியை சுட்டுக் கொன்றுள்ளனர்.
விசாரணையில், கொலையாளியின் பெயர் ஜோர்டான் டேனியல் கோகின், 28, என தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவு முதல் விடியும் வரை நடந்த துப்பாக்கி சூடு சம்பவம், வான்கூவர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைப் போல கனடாவில் துப்பாக்கி சூடு நடப்பது குறைவு. இருப்பினும், 2020ல், நோவா ஸ்காட்டியா மாகாணத்தில், பொலிஸ் அதிகாரி வேடத்தில் வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், 22 பேர் உயிரிழந்தது தான் அந்நாட்டின் மோசமான சம்பவமாக கருதப்படுகிறது.