15 வயதான தங்கையை 15 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஒரு கிராம் ஹெரோயின் போதைப் பொருளுக்காக போதைப் பொருள் விற்பனையாளருக்கு விற்ற அக்காவை கைது செய்துள்ளதாக மினுவங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணம் மற்றும் ஹெரோயினை வழங்கி சிறுமியை பெற்றுக்கொண்ட போதைப் பொருள் வியாபாரியும் 5 ஆயிரத்து 120 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண் 26 வயதானவர் எனவும் அவர் ஒரு பிள்ளையின் தாய் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். 15 வயதான சிறுமியின் தாய், போதைப் பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் அக்கா ஹெரோயின் போதைப் பொருளுக்கு மோசமான அடிமையானவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். தாய் சிறைக்கு சென்ற பின்னர், 15 வயதான சிறுமியை அக்கா தனது பாதுகாப்பில் வைத்திருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்கு நில்பனாகொட பிரதேசத்தில் ஹெரோயின் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 5 ஆயிரத்து 120 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அப்போது சந்தேக நபரின் வீட்டில் இருந்த சிறுமி பற்றி பொலிஸ் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த சந்தேக நபரின் தாய், சம்பவம் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார்.
சிறுமியை தமது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட பொலிஸார், சந்தேக நபரையும் சிறுமியின் அக்காவையும் கைது செய்துள்ளனர்.