நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள், மற்றும் அவ்வப்போது ஏற்பட்ட கலவரங்கள் மற்றும் தொழில், கல்வி போன்ற பல்வேறு காரணங்களால் இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்று அந்த அந்த நாடுகளில் குடியுரிமைப் பெற்று பலர் வாழ்கின்றனர்.
இலங்கை குடியுரிமையைத் துறந்து பிற நாடுகளின் சட்டத் திட்டங்களுக்கு ஏற்ப அங்கு குடியுரிமைப் பெற்று பலர் வாழ்ந்து வந்தாலும் தாய் நாட்டின் குடியுரிமையை மீளப் பெறும், இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு விசேட தொகுப்பினை நாங்கள் தருகின்றோம்.
இரட்டைக் குடியுரிமை என்றால் என்ன?
இரட்டைக் குடியுரிமை என்பது ஒருவர் ஒரே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ப குடியுரிமை பெற்றிருக்கும் நிலையைக் குறிக்கும்.
ஒருவர் எந்த நாட்டின் குடிமகன் என்பதை முடிவு செய்யும் பன்னாட்டு மரபு ஏதும் இல்லை. இது அந்தந்த நாடுகளின் சட்டங்களின் அடிப்படையிலேயே முடிவாகும். இச்சட்டங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டும் முரணாகவும் ஒன்று மற்றொரு நாட்டின் சட்டத்தை மீறாமலும் கூட அமையலாம்.
சில நாடுகள் இரட்டைக் குடியுரிமையை ஏற்பதில்லை. இவை குடியுரிமை கோரும் நபர்களை அவரது மற்ற குடியுரிமைகளைத் துறக்கக் கோரலாம். அல்லது, இன்னொரு நாட்டில் புதிய குடியுரிமை பெறுபவரிடம் இருந்து தம் நாட்டுக் குடியுரிமைகளைப் பறித்துக் கொள்ளலாம். சில நாடுகள் எல்லா நாடுகளிலும் கூடுதல் குடியுரிமைகள் பெறுவதை ஏற்கின்றன.
மற்ற சில நாடுகளோ, குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இரட்டைக் குடியுரிமை பெறலாம் என்று கட்டுப்பாடு விதிக்கக்கூடும். தற்போது இலங்கையில் இரட்டை குடியுரிமை வைத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இலங்கை குடியேற்றத் துறை விதிப்படி, வேறு நாட்டு குடியுரிமை பெற்றதால், இலங்கை குடியுரிமை நிறுத்தப்பட்டபிறகு, மீண்டும் இலங்கை குடியுரிமை பெற விரும்பினால் இரட்டை குடியுரிமை வழங்கமுடியும்.
இலங்கையில் இரட்டைக் குடியுரிமையை எவ்வாறு பெறுவது?
01. இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் போது, 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க குடியுரிமைச் சட்டத்தின் 19, 20 மற்றும் 21 ஆம் பிரிவுகளின் கீழ், இலங்கை பிரஜாவுரிமையை/ குடியுரிமையை இழந்த ஒருவருக்கு அல்லது இலங்கைப் பிரஜாவுரிமையை/ குடியுரிமையை இழக்க அண்மித்திருக்கும் ஒருவருக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
1. குடியுரிமைச் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளின் கீழ் பிறிதொரு நாட்டின் குடியுரிமையை பெற்றுக் கொண்டதன் பேரில், இலங்கைக் குடியுரிமையை இழந்த ஒருவருக்கு, அல்லது
2. குடியுரிமைச் சட்டத்தின் 19(3) ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளின் கீழ் பிறிதொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைப்பாட்டின் பேரில், இலங்கைக் குடியுரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஒருவருக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கக் கோரி விண்ணப்பிக்க முடியும்.
02. விண்ணப்பப் படிவத்தினை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்
1. விண்ணப்பப் படிவத்தை ஆங்கில மொழியில் பூரணப்படுத்துதல் வேண்டும். (தயவு செய்து ஆங்கில பெரிய எழுத்துக்களைப் (ENGLISH BLOCK CAPITALS) பயன்படுத்தவும்).
2. விண்ணப்பப் படிவத்தில் * குறியீடு இடப்பட்டுள்ள எல்லா இடங்களிலும்/ ந்தர்ப்பங்களிலும் தேவையற்ற சொல்லை அல்லது சொற்களை வெட்டிவிடவும்.
3. விண்ணப்பப் படிவத்தில் தேவையற்ற/ ஏற்புடையதாகாத பிரிவுகள்/ பகுதிகள் இருப்பின் உரிய இடங்களில் “ஏற்புடையதாகாது” எனக் குறிப்பிடவும்.
4. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப அங்கத்தவர்களாக இருப்பினும் ஒவ்வொருவருக்குமாக தனித் தனியாக விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், 3.5cm X 4.5cm அளவிலான 03 வர்ணப் புகைப்படங்களையும் விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும். அவற்றுள் ஒரு புகைப்படத்தை விண்ணப்பப் படிவத்தின் வலது பக்க மேல் மூலையில், புகைப்படத்தை ஒட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கூண்டினுள் ஒட்டவும்.
5. இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்கு, விண்ணப்பப் படிவத்தில் இல. 1 இன் கீழ் A தொடக்கம் G வரை காட்டப்பட்டுள்ள தகைமைகளுள் ஏதேனுமொரு தகைமையினை பூர்த்தி செய்திருத்தல் போதுமானதாகும். அதற்கமை உரிய தகைமை குறிப்பிடப்பட்டுள்ள கூண்டினுள் (√) அடையாளத்தை இடவும்.
6. விண்ணப்பப் படிவத்தின் 6 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள உறுதிமொழியை/ சத்தியப் பிரமாணத்தை, விண்ணப்பதாரி பூரணப்படுத்துதல் வேண்டும் என்பதுடன், அந்த உறுதிமொழி/ சத்தியப் பிரமாணம், சமாதான நீதவான் ஒருவரினால் அல்லது சத்தியப் பிரமாண ஆணையாளர் ஒருவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருத்தலும் வேண்டும்.
7. கணினி தரவுப் பத்திரத்தை ஆங்கில பெரிய எழுத்தில் (ENGLISH BLOCK CAPITALS) பூரணப்படுத்துதல் வேண்டும்.
8. தமது வயது 22 வருடங்களுக்குக் குறைந்த திருமணமாகாத விண்ணப்பதாரிகள் மட்டும், இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பப் படிவத்திற்கு மேலதிகமாக இணைப்பு 03 ஐயும் பூரணப்படுத்துதல் வேண்டும் என்பதுடன், தமது வயது 22 வருடங்களும், 06 மாதங்களும் கடந்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்கள் இவ் வகையின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
03. இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
1. விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி. (விண்ணப்பதாரி இலங்கை பிரஜாவுரிமையை பெற்றுக் கொண்டிருப்பது பதிவின் மூலமாயின், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழை அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதியினை சமர்ப்பிக்கவும்).
2. விண்ணப்பதாரி விவாகமானவராயின், விவாகச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி
3. இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர் குடியுரிமைச் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவின் கீழ், இலங்கைக் குடியுரிமையை இழந்த ஒருவராக இருக்கும் நிலையில் இருக்கும் ஒருவராக இருப்பின், அவர் பின்வரும் ஆவணங்ளைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
A. வெளிநாட்டு குடியுரிமைச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி.
b. தற்சமயம் வெளிநாட்டு குடியுரிமையைக் கொண்டுள்ள நாட்டினால் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டின் தரவுகள் பதியப்பட்டுள்ள பக்கத்தினதும், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள பக்கங்களினதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதிகள்
c. விண்ணப்பதாரி தற்சமயம் பிரஜாவுரிமையை கொண்டிருக்கும் நாட்டிலிருந்து பெற்றுக் கொண்ட பொலிஸ் இசைவுச் சான்றிதழ் (Police Clearance Certificate). (உரிய இசைவுச் சான்றிதழானது, விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் திகதிக்கு 03 மாதங்களுக்குக் கூடாத காலப்பகுதிக்குள் பெற்றுக் கொண்ட ஆங்கில மொழியில் விநியோகிக்கப்பட்ட இசைவுச் சான்றிதழாக இருத்தல் வேண்டும். இவ் இசைவுச் சான்றிதழ் ஆங்கில மொழியில் விநியோகிக்கப்பட்டில்லை எனில், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சமர்ப்பித்தல் வேண்டும்.)
d. இலங்கைக் கடவுச்சீட்டின் தரவுகள் பதியப்பட்டுள்ள பக்கத்தினதும், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள பக்கங்களினதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதிகள் (உரிய கடவுச்சீட்டு இருப்பின் மட்டும்)
அல்லது இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர் குடியுரிமைச் சட்டத்தின் 19(3) ஆம் பிரிவின் கீழ், இலங்கைக் குடியுரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஒருவராக இருக்கும் நிலையில் இருக்கும் ஒருவராக இருப்பின், அவர் பின்வரும் ஆவணங்ளைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
A. தற்போதுள்ள இலங்கைக் கடவுச்சீட்டின் தரவுகள் பதியப்பட்டுள்ள பக்கத்தினதும், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள பக்கங்களினதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதிகள்.
B. நிரந்தர வதிவிட வீசாவின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி.
C. விண்ணப்பதாரி தற்சமயம் நிரந்தர வதிவிட வீசாவினைக் கொண்டிருக்கும் நாட்டிலிருந்து பெற்றுக் கொண்ட பொலிஸ் இசைவுச் சான்றிதழ் (Police Clearance Certificate). (உரிய இசைவுச் சான்றிதழானது, விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் திகதிக்கு 03 மாதங்களுக்குக் கூடாத காலப்பகுதிக்குள் பெற்றுக் கொண்ட ஆங்கில மொழியில் விநியோகிக்கப்பட்ட இசைவுச் சான்றிதழாக இருத்தல் வேண்டும். இவ் இசைவுச் சான்றிதழ் ஆங்கில மொழியில் விநியோகிக்கப்பட்டில்லை எனில், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சமர்ப்பித்தல் வேண்டும்.).
4. விண்ணப்பதாரியின் வயது 55 வருடங்கள் பூர்த்தியின் பேரில் இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதாயின் (1.A இன் கீழ்) விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி.
5. கல்வி/ தொழில்சார் தகைமையின் கீழ் (1.B இன் கீழ்) விண்ணப்பிப்பதாயின், உரிய கல்வித் தகைமையை அல்லது தொழில்சார் தகைமையை உறுதிப்படுத்தும் வகையில் உரிய சான்றிதழ்கள் அல்லது அவற்றின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதிகள். (ஆகக் குறைந்த கல்வித் தகைமையாக 01 வருட டிப்ளோமா பாடநெறியொன்றினைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அதிலும் கூடிய பிற கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளும் கருத்திற் கொள்ளப்படும்).
6. இலங்கையிலுள்ள ரூபா 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட பெறுமதியான அசையா/ நிலையான சொத்துகளை/ ஆதனங்களைக் கொண்டுள்ளதன் மீது விண்ணப்பிப்பதாயின் (1.C இன் கீழ்), உரிய நிலையான சொத்துக்களுக்குரிய/ ஆதனங்களுக்குரிய ஆவணங்களின் (உறுதிகள் முதலியன) மூலப்பிரதிகளுடன் நிழற் பிரதிகளையும் சமர்ப்பித்தல் வேண்டும். இங்கு உரிய சொத்துக்களின்/ ஆதனங்களின் அல்லது காணிகளின் உறுதிகள் (Deeds), விலை மதிப்பீட்டு அறிக்கை (valuation report), உரித்து அறிக்கை (title reports) என்பவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
விலைமதிப்பீட்டு அறிக்கை மற்றும் உரித்து அறிக்கை தயாரிக்கப்பட்ட திகதியிலிருந்து 03 மாதங்களுக்குள், அவ் அறிக்கைகளுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தல் வேண்டும். இங்கு விலை மதிப்பீட்டு அறிக்கையானது, விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விலை மதிப்பீட்டாளரொருவரினால் தயாரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
7. ரூபா 2.5 மில்லியனை அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை, இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வர்த்தக வங்கியிலேனும் 3 வருட காலத்திற்கு நிரந்தர வைப்பில் வைப்பிலிட்டு, அதற்கமைய விண்ணப்பிப்பதாயின் (1.D இன் கீழ்), இப் பணத்தை 03 வருடங்களுக்குள் மீளப் பெற்றுக் கொள்வதில்லை என்பதை உறுதிப்படுத்தி உரிய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட அத்தாட்சியை/ சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முறை குறித்து மேலும் அறிய இங்கே அழுத்தவும்…
04. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறை
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, விண்ணப்பதாரி குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு நேரடியாக வந்து, குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் நேரடியாக ஒப்படைக்கலாம் அல்லது விண்ணப்பதாரி வெளிநாடொன்றில் வசிப்பதாயின், தாம் பிரஜாவுரிமை பெற்றுள்ள/ நிரந்தர வதிவிட வீசாவைக் கொண்டுள்ள நாட்டில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் ஒப்படைக்கலாம்.
வெளிநாட்டுத் தூதரகங்களில் ஒப்படைக்கப்படுகின்ற விண்ணப்பப் படிவங்களும், அதனுடன் இணைக்கப்படுகின்ற சான்றிதழ்களின் நிழற் பிரதிகளும் (இல. 3 இல் காட்டப்பட்டுள்ள ஆவணங்கள்), வெளிநாட்டுத் தூதரகத்தின் தலைவரினால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட/ தத்துவமளிக்கப்பட்ட தூதரகத்தின் மூன்றாவது செயலாளரினால் அல்லது அவரிலும் சிரேஷ்ட உத்தியோகத்தரொருவரினால் அத்தாட்சிப்படுத்தப்படுதல் வேண்டும்.
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுகின்ற விண்ணப்பப் படிவங்களும், அதனுடன் இணைக்கப்படுகின்ற சான்றிதழ்களின் நிழற் பிரதிகளும், குடியுரிமைப்/ பிரஜாவுரிமைப் பிரிவின் பிரதிக் கட்டுப்பாட்டாளரினால் அல்லது உதவிக் கட்டுப்பாட்டாளரினால் அத்தாட்சிப்படுத்தப்படும்.
கட்டுப்பாட்டாளர் நாயகம், குடிவரவு,
குடியகல்வுத் திணைக்களம், பிரஜாவுரிமைப் பிரிவு),
4 ஆம் மாடி, “சுகுறுபாயா”,
ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
பத்தரமுல்லை.
மின்னஞ்சல்- accit@immigration.gov.lk 05.
இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக செலுத்த வேண்டிய கட்டணங்கள்
பிரதான விண்ணப்பதாரி ரூ. 345,000.00
வாழ்க்கைத் துணை ரூ. 57,500.00
22 வயதுக்குக் குறைந்த திருமணமாகாத பிள்ளைகள் – ஒரு பிள்ளைக்கு – ரூ. 57,500.00
சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்கள் பரீட்சிக்கப்பட்டு, உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டு உரிய அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னரே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்டணங்கள் அறவிடப்படும்.
உரிய கட்டணங்களை செலுத்தப்படுவது தொடர்பில் திணைக்களத்தினால் விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும் என்பதுடன், அவ் உரிய கட்டணத்தை, பத்தரமுல்லை, “சுகுறுபாயா” கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் 04 ஆம் மாடியில் அமைந்துள்ள குடியுரிமைப் பிரிவின் சிறாப்பரிடம் பணமாக (இலங்கை ரூபாவில்) செலுத்துதல் வேண்டும்.