இலங்கையில் இருக்கும் இந்தியர்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம், நேற்று (25-08-2022) வியாழக்கிழமை அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
புதுடெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய, வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி ( Arindam Bagchi) இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருள் மற்றும் உணவுப் பற்றாக்குறை நிலவி வருவதுடன், பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மாதம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா இந்த ஆண்டு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
“அங்குள்ள முன்னேற்றங்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம். இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியர்களே உள்ளனர் என்பது எங்களின் புரிதல்,” என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
“தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கான இந்தியர்களின் பயணத்தைப் பொறுத்தவரை, இந்த குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இலங்கை உட்பட இந்தியாவிற்கு வெளியே தங்கியிருக்கும் இந்தியப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு, எமக்கு எப்பொழுதும் முதன்மையான அக்கறை என்பதை நான் வலியுறுத்துகிறேன் என அவர் கூறியுள்ளார்.
மேலும் “இந்தியாவிற்கு வெளியே உள்ள இந்தியர்கள் சம்பந்தப்பட்ட எந்த விரும்பத்தகாத சம்பவங்களையும் தடுப்பதே எங்களது முயற்சியாகும்’’ எனவே, இலங்கையில் இருக்கும் போது இந்தியர்கள் அனைத்து அக்கறை மற்றும் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நாங்கள் ஊக்குவிப்போம்.
“இலங்கைக்கு எந்தவொரு அத்தியாவசியப் பயணத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர் நாணய மாற்றம் மற்றும் எரிபொருள் நிலைமை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய காரணிகளையும் அவர்கள் ஆராய வேண்டும்,” என்று பாக்சி மேலும் கூறினார்.