பிரித்தானியாவில் தொண்டு நிறுவனம் ஒன்றில் அலுவலக மேலாளராக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் 14,000 பவுண்டுக்கும் அதிகமான தொகையை கையாடல் செய்து சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த தொகையில் அவர் தமது IVF சிகிச்சை, கவுன்சில் வரி மற்றும் பல்கலைக்கழகத்தில் அவரது மருமகனுக்கு நிதியளிக்கவும் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது செயல்பாட்டில் இல்லாத BAME என்ற தொண்டு நிறுவனத்தில் அலுவலக மேலாளராக கடந்த 2000 ஆண்டில் இருந்தே மிலந்தி வெலமேதகே பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்காக சுமார் 1,725 பவுண்டுகள் வரை மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து, 2014ல் மோசமான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தணிக்கையில், நியூகேஸில் நகர சபைக்கு அனுப்பப்பட்ட காசோலைகள் உட்பட மிலந்தி முன்னெடுத்த பல சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் தீவிரமான விசாரணையில், குறித்த காசோலைகள் மிலந்தியின் கென்டனில் அமைந்துள்ள குடியிருப்புக்கான கவுன்சில் வரி செலுத்த பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.
மொத்தம் 69 காசோலைகள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதும், ஏப்ரல் 2013 மற்றும் ஜூலை 2014 வரையான காலகட்டத்தில் மொத்தம் 14,535 பவுண்டுகள் தொகையை குறித்த தொண்டு நிறுவனத்தில் இருந்து மோசடி செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த மோசடி செய்யப்பட்ட தொகையில் பல்கலைக்கழக கல்விக்காக இலங்கையில் இருந்து பிரித்தானியா வந்துள்ள மருமகனுக்கும், தமது IVF சிகிச்சைக்காகவும் மிலந்தி பயன்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து நியூகேஸில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கடந்த மாதம் குற்றவாளி என கண்டறியப்பட்டார். தற்போது 58 வயதாகும் மிலந்திக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனையும் 60 மணி நேரம் ஊதியமற்ற பணி செய்யவும் விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பின் போது நீதிபதி தெரிவிக்கையில், நீங்கள் மிகவும் நம்பகமான பணியாளராக இருந்தீர்கள் மட்டுமின்றி குறிப்பிடத்தக்க பொறுப்பான பதவியிலும் இருந்துள்ளீர்கள்.
ஆனால் இது நம்பிக்கை மீதான துஷ்பிரயோகம் எனவும் நீங்களே உங்களுக்கு அவமானத்தை கொண்டு வந்தீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெருமூளை வாதம் கொண்ட ஒரு இளம் மகனை வைத்துக் கொண்டு சிறைக்கு செல்லும் நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டுள்ளீர்கள் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.