உக்ரைனுக்கு எதிரான போருக்கு இடையே, ரஷ்ய படையில் 1.37 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) உத்தரவிட்டுள்ளார்.
இதனால், துருப்புகளின் மொத்த எண்ணிக்கை 11.5 லட்சம் என்ற அளவில் உயரும்.
ரஷ்ய படையில் எண்ணிக்கையை அதிகரிக்கும் புடினின் உத்தரவு ஜனவரி 1-ம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும்.
இருப்பினும், அதிகாரிகள் மட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆள்சேர்ப்பு அல்லது சுயவிருப்பத்தின் பேரில் படையில் சேரும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அல்லது இவை இரண்டும் சேர்ந்து காணப்படுவது என்பதில் எந்த வகையில் ஆள்சேர்ப்பு இருக்கும் என குறிப்பிடப்படவில்லை.
இந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் மொத்த ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கை 20.39 லட்சம் ஆக உயரும். அவர்களில் 11.50 லட்சம் பேர் ஆயுத படை வீரர்களாக இருப்பார்கள்.
இதுபற்றி அரசு வெளியிட்ட செய்தியில், சுயவிருப்பம் கொண்ட ஒப்பந்த அடிப்படையிலான வீரர்களே இதில் இடம் பெறுவார்கள் என்றும் இதனை உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.
இதுதவிர, சில கைதிகளை கூட ராணுவ பணியின் ஒரு பகுதியாக படையில் சேர வரும்படி அழைப்பு விடப்பட்டு உள்ளது என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.