இலங்கை, சீனாவுக்கு செலுத்த வேண்டிய 9.95 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு பதிலாக, இலங்கையில் உள்ள சீனாவின் திட்டங்களுக்கு அந்த கடனை ஈடு செய்ய விரும்புவதாக சீனா இலங்கைக்கு அறிவித்துள்ளதாக, ஞாயிறு இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமது ஊடகவியலாளர், ஒருவர், இராஜதந்திர தரப்புகளில் இருந்து இந்தத் தகவலைப் பெற்றுள்ளதாக இந்த செய்தி தாள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் முக்கியப் பிரச்சினையாக இருந்த சீனக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு வழியாக இலங்கை அரசாங்கம் இதை ஏற்றுக்கொள்ளலாம் என்று குறித்த செய்தித்தாள் கருத்து தெரிவித்துள்ளது.
சீன கடன்கள் மறுசீரமைப்பு
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க சீனா உடன்படவில்லை, அதாவது திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்க விரும்பவில்லை. இந்த நிலையில், கடன் கொடுப்பனவை பிற்போடுவதற்குப் பதிலாக இலங்கையில் சீனத் திட்டங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சர்வதேச மாநாட்டு அரங்குகள், மைதானங்கள், நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், தாமரை கோபுரம் மற்றும் பல கட்டுமானங்களை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றது.
அவற்றில், இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதில் முக்கியமான நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமும் மத்தள விமான நிலையமும் உள்ளடங்கும்.
நுரைச்சோலை ஆலையின் கட்டுமானத்திற்காக முதல் கட்டத்தில் 155 மில்லியன் டொலரும், இரண்டாம் கட்டத்தில் 300 மில்லியன் டொலரும் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 891 மில்லியன் டொலரும் பெறப்பட்டுள்ளது.
இலங்கை சீனா மீது கொண்டுள்ள நம்பிக்கை
மேலும், 214 மில்லியன் டொலர் செலவில் மொரக்கஹகந்த அபிவிருத்தித் திட்டம் மற்றும் பல நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளன. உலக அரசியலில், சீனாவுக்கு எதிரான முகாமுக்கு, இலங்கை தெளிவான நம்பிக்கை காட்டுவதன் காரணமாகவே இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைக்க சீனா விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.
இலங்கை அரசாங்கம், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் நட்புறவுடன் உள்ளது.