வெளிநாட்டு பணியாளர்கள் ஈட்டும் வருமானத்தை டொலரில் இலங்கைக்கு அனுப்பாமல் வெளிநாடுகளில் உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய வங்கியும் பொலிஸாரும் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உண்டியல், ஹவாலா போன்ற முறைகளில் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாறிக்கொண்ட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பணம் அனுப்புவோருக்கு எச்சரிக்கை
அவர்களை போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முற்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொரியா, ஜப்பான், குவைத், டுபாய், அபுதாபி மற்றும் பல நாடுகளில் ஹவாலா முறையின் கீழ் இலங்கையர்கள் ஈட்டும் அந்நியச் செலாவணியைத் தக்கவைக்க போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மேற்கொண்ட திட்டம் வெளிவந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்படும் டொலர்களை போதை பொருள் கடத்தல்காரர்கள் பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக இலங்கையர்களின் வீடுகளுக்கு ரூபாயில் பணத்தை வழங்கவே திட்டமிட்டுள்ளனர். அதற்கமைய, வெளிநாடுகளில் இலங்கை பணியாளர்கள் இருக்கும் நாடுகளில் இருந்து பணம் வசூலிக்கும் பிரதிநிதிகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் வியாபாரிகள்
ஹவாலா, உண்டியல் செயற்பாடுகளில் ஈடுபடும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்த நடவடிக்கையை வங்கி சட்ட முறைக்கு வெளியே ஒரு தந்திரமாக முன்னெடுத்துள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெருமளவில் போதைப்பொருள் கடத்தல் பணம் புழக்கத்தில் உள்ள வங்கிக் கணக்குகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அடுத்து இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமான வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து வங்கிக் கணக்குகளுக்கு வரும் அந்நிய செலாவணியாகும். எனினும் வரவு குறைந்தமை தொடர்பில் மத்திய வங்கி சட்டவிரோத நாணய பரிவர்த்தனைகளை அவதானித்திருந்தது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இலங்கையில் கிலோ கணக்கில் போதைப்பொருள் கையிருப்பில் பணத்தை வங்கியில் செலுத்தாமை தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்து இந்தக் கடத்தல்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
மத்திய வங்கி நடவடிக்கை
மத்திய வங்கியின் ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இது தொடர்பான விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார். இதனால், மத்திய வங்கி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இணைந்து வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை பெற்று, அவர்களின் கணக்குகளுக்கு முன்னர் எவ்வாறு பணம் பெறப்பட்டது மற்றும் தற்போது எவ்வாறு பணம் அனுப்பப்படுகிறது என்பதை கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பு ஏற்படுத்திய பணத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நான்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.