பாரிய எண்ணிக்கையிலான பணியாளர்கள் ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் இந்த ஆட்சேர்ப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கான ஆட்சேர்ப்பு
நாடாளுமன்றில் வைத்து அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் பணி செய்ய முடியாதவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமது ஊடகப்பிரிவுக்கு பாரிய எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்துள்ளார்.
அரச சேவையில் அதிகளவானோர் இருப்பதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலேயே இந்த ஆட்சேர்ப்பை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேற்கொண்டுள்ளது.
தெளிவுப்படுத்த கோரிக்கை
எனவே அரச சேவையாளர்களை வீடுகளுக்கு செல்லக் கோரும், அரச சேவையாளர்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமது ஊடகப்பிரிவுக்காக ஆட்சேர்ப்பு தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இந்த பணியாளர்களுக்கு 80000 ரூபா வேதனமும் எரிபொருளும் வழங்கப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் வெட் வரியை 8 வீதமாக குறைத்த போது நாடாளுமன்றில் மேசையில் தட்டி மகிழ்ச்சி வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே, வெட் வரியை 15 வீதமாக அதிகரிப்பதாக கூறிய போதும் மேசைகளில் தட்டி வரவேற்பு வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.