சட்ட ரீதியான வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதன் மூலம் விமான நிலையத்தில் கிடைக்கும் சுங்கத் தீர்வை பெறுமதியை 6650 டொலர்களாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான விண்ணப்பம்
இதேவேளை வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் சட்ட ரீதியான வழிமுறைகளில் வங்கிகளின் ஊடாக பணத்தை அனுப்பி வைத்தால், வாகனம் ஒன்றை இறக்குமதி செய்ய அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் அல்லது https://ta.labourmin.gov.lk/wp-content/uploads/2022/09/02.2022-Application-Tamil.pdf என்ற இணையத்தளத்தின் ஊடாக இந்த விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
வங்கிகளின் ஊடாக பணம் அனுப்புவோருக்கான திட்டங்கள்
வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள், சட்ட ரீதியான வங்கிகளின் ஊடாக பணம் அனுப்பி வைக்கும் போது அவ்ர்களுக்கு பல்வேறு நலன்களை வழங்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் இலத்திரனியல் வாகனம் இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன்படி, இந்த வாகன இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தலும், விண்ணப்பப் படிவமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரையிலான காலப் பகுதியில் 3000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை அனுப்பி வைத்தவர்கள், தாங்கள் அனுப்பி வைத்த தொகையின் 50 வீதமான தொகைக்கு நிகரான இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.