புத்தக வாசிப்பு பழக்கம், அறிவாற்றல் திறனை மட்டும் மேம்படுத்துவதில்லை. ‘மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும், வயதாகும்போது நரம்பியல் சார்ந்த கோளாறுகளில் இருந்தும் காப்பாற்றும்’ என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வாசிப்பு பழக்கத்தை தொடரும்போது மேலும் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பது பற்றி பார்ப்போம். அல்சைமரை தடுக்க முடியும்: வாசிப்பு பழக்கம் மூளையை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.
அல்சைமர் போன்ற அறிவாற்றல் திறன் குறைபாடு சார்ந்த நோய்களை தடுக்க உதவும். அல்சைமர் என்பது மூளையை சுருங்க செய்து, மூளை செல்களை சிதைக்கும் ஒருவகை நரம்பியல் கோளாறு சார்ந்த நோயாகும். இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட நபரின் சமூக செயல்பாடு, நடத்தை, சிந்தனை திறன் குறையும். அப்படிப்பட்டவர்கள் வாசிப்பு போன்ற மன ரீதியான தூண்டுதல் செயலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும்போது வயது அதிகரிப்பதால் ஏற்படும் டிமென்ஷியா போன்ற பிரச்சினைகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
மூளையை மேம்படுத்தும்: வாசிப்பு பழக்கம் ஒருவரை புத்திசாலியாக்கும். அல்சைமர் போன்ற நோய்களை தடுப்பதோடு மூளையின் சக்தியை அதிகரிக்கச்செய்யும். மேலும் வாசிப்பு என்பது மூளையின் சிக்கலான நெட்வொர்க்கை மீட்டெடுக்கும் செயல்பாடு என்பதால் சமிக்ஞைகளை முதிர்ச்சியுடன் வெளிப் படுத்த உதவும்.
மன அழுத்தம் குறையும்: புத்தகங்களை படிக்கும்போது அதில் இடம்பெற்றிருக்கும் சாராம்சத்திற்குள், இலக்கியத்துக்குள் மனம் நுழைந்துவிடும். அது நிஜ வாழ்க்கையில் எதிர்கொண்ட சிக்கல்களை ஒதுக்கிவைத்துவிடும். அது பற்றிய எண்ணங்களை மறக்கடித்துவிடும். மேலும் புத்தகம் படிப்பது மன அழுத்தத்தால் ஏற்படும் உணர்வை குறைக்க உதவும். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் வழிவகுக்கும். மனதுக்கு ஓய்வையும் அளிக்கும். அதனால் மன அழுத்தத்தில் இருக்கும்போது மற்ற செயல்களில் கவனம் செலுத்துவதை விட புத்தகம் வாசிப்பது சிறந்தது.
மனச்சோர்வு: மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமாக உணரும் தனிமைப்படுத்துதல் மற்றும் அன்னியமான உணர்வை வாசிப்பு பழக்கம் கட்டுப்படுத்தும். அத்துடன் வாசிப்பு பழக்கம் கற்பனை உலகுக்குள் அழைத்து செல்லும். பிரச்சினைகளுக்கு தற்காலிக வடிகாலாகவும் அமையும். பொதுவாகவே மனதில் எதிர்மறை எண்ணங்கள் குவியும்போது மனச்சோர்வு ஏற்படக்கூடும். நல்ல புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அந்த இடத்தை நேர்மறையான எண்ணங்களால் நிரப்ப முடியும். நேர்மறையான ஆற்றலும் உருவாகும்.
தூக்கம்: இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக டி.வி., செல்போன், சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக புத்தகம் படிப்பது சிறப்பானது. தினமும் தூங்குவதற்கு முன்பு புத்தகம் வாசிப்பது மனதை நிதானப்படுத்த உதவும். இரவில் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு ஊக்குவிக்கும். உடலுக்கு பயிற்சி கொடுப்பதற்கு உடற்பயிற்சியை நாடுவது போல, மூளைக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். வாசிப்புதான் மூளைக்கான சிறந்த பயிற்சியாக அமையும்.