“இலங்கையில் தற்போது அமைதியாகியுள்ள மக்களின் ஆர்ப்பாட்டம் பின்னர் பாரதூரமான போராட்டமாக வெடிக்கும். சுனாமி ஏற்பட முன்னர் கடல் அலைகள் அமைதியடைவதை போன்று, தற்போது தணிந்துள்ள ஆர்ப்பாட்டங்கள் பாரிய அலையாக மீண்டும் வெளியாகும்.”என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி
மேலும் கூறுவகையில்,“அமெரிக்க செனட் சபையில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை அரசு இன்னும் கைவிடவில்லை.
மீண்டும் வெடிக்கும் போராட்டம்
அரசின் பழிவாங்கல் செயற்பாடுகளை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். தற்போது அமைதியாகியுள்ள மக்களின் ஆர்ப்பாட்டம் பின்னர் பாரதூரமான போராட்டமாக வெடிக்கும். சுனாமி ஏற்பட முன்னர் கடல் அலைகள் அமைதியடைவதை போன்று, தற்போது தணிந்துள்ள ஆர்ப்பாட்டங்கள் பாரிய அலையாக மீண்டும் வெளியாகும்.
நாட்டில் சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்கு ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அரசில் ஊழல், மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒற்றுமையற்ற அரசாங்கம்
சர்வகட்சி அரசை அமைப்பதற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. ஆனால், தற்போதைய அரசுக்குள்ளேயே அமைச்சர்கள் ஒற்றுமையின்றி செயற்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கலால் அடுத்த மாதம் 10 – 12 மணித்தியாலங்கள் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அரசால் தொடர்ச்சியாக மக்களுக்கு இவ்வாறான நெருக்கடிகளே ஏற்படுத்தப்படுகின்றன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எந்தவொரு தேர்தலிலும் களமிறங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெருமளவான தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம். பொதுத் தேர்தலில் எமது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் அமையும்” என தெரிவித்துள்ளார்.