தர்பூசணி பழங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக நீர் நிரம்பி இருப்பதால் கோடை காலத்தில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழமாக இருக்கிறது. பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் சதைப்பகுதியைத்தான் ருசித்து சாப்பிடுவார்கள். அதன் விதைகளை குப்பையில் போடும் வழக்கம்தான் இருக்கிறது. தர்ப்பூசணி பழ விதைகளை வறுத்தோ, மாவாக்கியோ பயன்படுத்தலாம். அவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கின்றன.
ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தர்பூசணி விதைகளை உட்கொள்ளலாம். அதில் உள்ளடங்கி இருக்கும் மெக்னீசியம், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளின் செயல்பாடுகளை துரிதப்படுத்தவும் உதவும்.
இதயத்தை பாதுகாக்கும்: எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது தமனிகளில் கொழுப்பு படிவுகள் அதிகமாக சேரும். தமனியில் அடைப்பு, மாரடைப்பு போன்ற அபாயத்தையும் அதிகரிக்க செய்யும். தர்பூசணி விதைகளில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது எல்.டி.எல்-கொலஸ்ட்ரால் அல்லது ரத்த ஓட்டத்தில் மோசமான கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது.
அத்தியாவசிய ஊட்டச்சத்துகள்: தர்பூசணி விதைகள் குளோபுலின் மற்றும் அல்புமின் புரதங்களை கொண்டுள்ளன. இவை நோய் எதிர்ப்பு அமைப்புக்கு உதவும். நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் துணைபுரியும். மேலும் ரத்த ஓட்டத்தில் திரவ அளவுகளையும் சீராக பராமரிக்க உறுதுணையாக இருக்கும். தர்பூசணி விதைகளில் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்களும் உள்ளன. அவை வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கும், வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ் மற்றும் அமினோ அமிலங்களின் செயல்பாட்டுக்கும் அவசியமானவை.
காயங்கள் குணமாகும்: தர்பூசணி விதையில் அமினோ அமிலமான எல்-அர்ஜினைன் அதிக அளவில் இருக்கிறது. இது நைட்ரிக் ஆக்ஸைடு அளவுகளை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அதனால் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய்: உயர் ரத்த சர்க்கரை அளவுகளால் பாதிக்கப்படும் நோயாளிகள் தர்பூசணி விதைகள் சாப்பிடுவது நல்லது என்ற கருத்து நிலவுகிறது. அதில் மெக்னீசியம் உள்ளடங்கி இருப்பது, இன்சுலின் உணர் திறனை நிர்வகிக்கவும், ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும்.