யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதியில் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலியை வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (05-10-2022) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே இந்த வழிப்பறி கொள்ளை கத்திமுனையில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவத்துடன் தொடர்புடைய ஊரெழு மற்றும் யாழைச் சேர்ந்த 23, 25 மற்றும் 42 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய சந்தேக நபர்கள் மூவரும் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்களிடமிருந்து நான்கரை தங்கப்பவுண் சங்கிலி மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.