கடந்த மாதம் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து காணாமல்போன கைதி ஒருவர் மற்றுமொரு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் செப்டெம்பர் 16 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் காணாமல்போனமை தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், மற்றும் ஒரு சம்பவத்தின் போது கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
காணாமல்போன கைதி அடையாளம்
இதன்போதே அவர் ஏற்கனவே வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து காணாமல்போன கைதி என அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து சந்தேகநபரிடம் சிறைச்சாலை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதன்படி, சிறையின் சுவரில் ஏறி குதித்து தப்பிச்சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். காவலில் வைக்கப்பட்ட முதல் நாளிலேயே எந்த முயற்சியும் இன்றி இலகுவாக எப்படி தப்பிச்சென்றார் என்பதை அதிகாரிகளிடம் அவர் வெளிப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
தப்பியோடிய கைதி தென்னை மரங்களில் ஏறுவதிலும் நடனக்குழுவில் நடனமாடுவதிலும் வல்லவர் என விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நிலையில் தப்பியோடிய கைதி தொடர்பான குற்றச்சாட்டுகள் சிறைச்சாலை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.