லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையையும் குறைக்குமாறு கோரி பெண்கள் அமைப்பொன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு – கிருலப்பனையில் அமைந்துள்ள லாஃப் எரிவாயு நிறுவனத்தின் முன் இன்று (11.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் குறித்த பெண் அமைப்பு கருத்து தெரிவிக்கையில், லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. சாதாரணமாக 12.5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 5800 ரூபாவாக காணப்படுகின்றது.
எரிவாயு சிலிண்டரின் விலை
ஆனால் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 4200 ஆகும். நாட்டில் காணப்படும் பணவீக்கத்தால் எம்மால் இந்த நிலையை சமாளிக்க முடியாது. வெற்று சிலிண்டர்களை எம்மால் வைத்திருக்க முடியாது.
லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்க முடியாவிடின் எங்களுடைய வெற்று சிலிண்டர்களை லாஃப் எரிவாயு நிறுவனம் பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தை தாருங்கள். நாங்கள் லிட்ரோ எரிவாயு சிலிண்டருக்கு மாறுகின்றோம்.
தீர்வு தருமாறு கோரிக்கை
எங்களது கோரிக்கை சரியாக நிறைவேற்றப்பட்டால் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பதற்கு எங்களுக்கு எந்த அவசியமுமில்லை. இது தொடர்பில் எங்களுக்கு மிக விரைவில் தீர்வு தர வேண்டும் என தெரிவித்துள்ளது.