தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்களிடம் கையளிக்கப்பட்ட இந்த மாதத்தில் 900 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தாமரை கோபுரத்தை பார்வையிட இதுவரை இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து 165,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாள் வருமானம்
பார்வையாளர்கள் வாங்கும் டிக்கெட்டுகள் மற்றும் அதில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட வசதிகள் மூலம் மேற்படி வருமானம் பெறப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பார்வைக்கு அனுமதியளிக்கப்பட்ட முதல் நாளான செப்டம்பர் 15 ஆம் திகதி 21 வெளிநாட்டவர்கள் உட்பட 2612 பேர் வந்து பார்வையிட்டு 15 இலட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டித்தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.