சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சிரியா, இந்தியாவிலிருந்து தேயிலையை கொள்வனவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும்,சிரியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் காரணமாக, சரக்குகள் லெபனான் வழியாக அனுப்பப்படுகின்றன என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈராக் மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் இலங்கையில் இருந்து சந்தைக்கு தேயிலை இல்லாத நிலையில் இந்தியாவில் இருந்து பெருமளவு மரபுவழி தேயிலையை கொள்வனவு செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தேயிலை பெய்ரூட் வழியாக சிரியாவுக்கு செல்கிறது மற்றும் வேறு சில நாடுகள் வழியாக கட்டணம்,இந்தியாவுக்கு செலுத்தப்படுகின்றது.
இந்திய தேயிலை ஏற்றுமதி
சிரியாவில் மரபு ரீதியான (ஒர்த்தடொக்ஸ்) தேயிலைக்கான கேள்வி சிறப்பாக இருப்பதாக இந்திய தேயிலை ஏற்றுமதி நிறுவனமான பன்சாலி அண்ட் கோ நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் அனிஷ் பன்சாலி தெரிவித்துள்ளார்.
ஒர்த்தடொக்ஸ் தேயிலை என்பது மரபுரீதியான தேயிலையைக் குறிக்கிறது, இது பாரம்பரிய அல்லது மரபுவழி முறைகளான பறித்தல், வாடுதல், உருட்டுதல்,மற்றும் உலர்த்துதல் போன்ற முறைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஒர்த்தடொக்ஸ் தேயிலையின் உலகளாவிய வர்த்தகத்தில் பாதியை இலங்கை கொண்டுள்ளது.
எனினும் நாட்டில் நிலவும் அரசியல் குழப்பங்கள் காரணமாக இலங்கையின் தேயிலை சந்தையில் இல்லாதது இந்தியா மரபுவழி தேயிலை நுகர்வு நாடுகளுக்குள் நுழைவதற்கு உதவியுள்ளது.
இந்திய தேயிலை சபையின் புள்ளிவிபரம்
இந்திய தேயிலை சபையின் புள்ளிவிபரங்களின்படி. 2021 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 48.11 மில்லியன் கிலோவுடன் ஒப்பிடும்போது, 2022 ஜனவரி-ஜூலையில் இந்தியாவின் ஒர்த்தடொக்ஸ் தேயிலை ஏற்றுமதி மொத்தம் 57.70 மில்லியன் கிலோவாக இருந்தது.
இலங்கையால் சந்தைப்படுத்தமுடியாத சந்தைகளிலேயே இந்திய தேயிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகள் பெருமளவு மரபுவழி தேயிலைகளை கொள்வனவு செய்கின்றன.
2021ல் 196.54 மில்லியன் கிலோவாக இருந்த இந்திய தேயிலையின் ஏற்றுமதி, 2022ல் (ஒர்த்டொக்ஸ் மற்றும் விரைவான தொழில்நுட்ப(சிடிசி) இரண்டையும் சேர்த்து) 225 மில்லியன் கிலோவைத் தாண்டும் என்று நம்புவதாக ஆசிய தேயிலை நிறுவனத்தின் இயக்குனர் மோஹித் அகர்வால் கூறியுள்ளார்.