மலையகத்தின் பல பகுதிகளிலும் நேற்று பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகின்றது.
ஹட்டன் மற்றும் அதன் சூழ உள்ள பகுதிகளில் பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழைக்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் மழை காரணமாக ஹட்டன் நகரின் வீதிகள் வெள்ள நீரில் மூழ்கின. இதன் காரணமாக வாகன சாரதிகளும் பாதசாரிகளும் பெரும் சிரமத்தை எதிர் நோக்கினர்.
ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி, ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – பொகவந்தலாவை, ஹட்டன் – மஸ்கெலியா போன்ற வீதிகளில் அதிக பனிமூட்டம் நிலவுவதால் வாகன சாரதிகளை அவதானமாக செயற்படும் படி பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தனை வரையான பகுதிகளில் பல சிறு மண் சரிவுகள் காணப்படுவதனால் பல இடங்களில் வீதி ஒருவழியாக காணப்படுவதுடன் வீதி வழுக்கும் நிலையும் அதிகரித்து காணப்படுகின்றமையால் குறித்த வீதியை பயன்படுத்துபவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.