நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேல் வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கின்றனர்.
இவ்வீதியில் வெள்ள நீர் பரவி வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை, அன்னமலை, சொறிக்கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் காளனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
நிறைவேற்றப்படாத கோரிக்கை
மேலும், இவ்வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கமும் நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் பல நாட்களாகப் பெய்து வரும் மழையினால் வயல் பகுதிகளில் நீர் தேங்கி நிற்கின்றன. இதனால் நெற்பயிர்கள் சேதமடையும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம்
இதேவேளை யாழில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஜே/298 மறவன்புலவு, ஜே/339 வரணி வடக்கு, ஜே/145 வடலியடைப்பு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே குறித்த பாதிப்புக்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
விசேட கலந்துரையாடல்
யாழில் தற்போதுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருகின்றது.
யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று(10.11.2022) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள் யாழ்.மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச சபை தவிசாளர்கள் முப்படையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு-வவுணதீவு பிரதேசத்திற்கு செல்லும் வலையிறவு பாலம் வீதி நீரில் மூழ்கியுள்ளது.
மட்டக்களப்பு நகரில் இருந்து மேற்கே மண்முனை மேற்கு பிரதேசத்திற்கு செல்லும் பிரதான வீதியாகும். இவ்வீதி ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் பயணங்களை பெரும் சிரமத்துடன் மேற்கொண்டு வருவதனை காணமுடிகின்றது.



















