தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் செய்தி குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
கொள்கை ரீதியான உடன்பாடுகள் இல்லை
குறித்த செய்திக் குறிப்பில்,“தமிழர் தரப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகளும், உட்கட்சி முரண்பாடுகளும் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பலவீனப்படுத்தியிருகின்ற அனுபவத்தினை மறந்துவிடக் கூடாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில்,கொள்கை ரீதியான உடன்பாடுகள் ஏதுமின்றி, தேர்தல் வெற்றிகளை இலக்காக் கொண்டே கட்சிகள் இணைந்திருக்கின்ற என்பது வெளிப்படையானது.
தலைமைக்கான போட்டிகள்
எனினும், கடந்த காலங்களில் தலைமைக்கான போட்டிகளும், அதனால் உருவாகிய முரண்பாடுகளுமே தமிழ் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டமும் வலுவிழந்து போனமைக்கான பிரதான காரணமாக அமைந்திருந்ததுடன், கிடைத்த சந்தர்ப்பங்கள் பல கைநழுவிப் போவதற்கும் காரணமாக இருந்தது.
எனவே, தற்போது உருவாகியுள்ள சூழலையும் தவறவிடாது பயன்படுத்திக் கொள்வதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட அனைத்து தரப்பினரும், காலத்தை வீணடிக்காது விட்டுக்கொடுப்புக்களின் மூலம் தமக்கு உள்ளே இருக்கின்ற பிரச்சினைகளையும், தமக்கு இடையிலான பிரச்சினைகளையும் தீர்த்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும்”என்று அழைப்பு விடுத்துள்ளார்.