வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரியாகப் பணியாற்றிய குஷான் என்பவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படுவார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஓமானுக்கு வேலைக்குச் சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தஞ்சம் புகுந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குஷான் மீது குற்றம் சுடத்தப்பட்டுள்ளது.
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதம அதிகாரியாகப் பணியாற்றிய இந்த சந்தேக நபருக்கு எதிராக பல பெண்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நபர் ஓமான் நாட்டில் வேலைக்குச் சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி தஞ்சம் புகுந்த பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
அத்துடன் தஞ்சம் கோரி வரும் சில பெண்களை நாட்டிற்கு அழைத்து வந்த நிறுவனங்களிடமே திருப்பி அனுப்பப்படுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நபரை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள ஓமான் தூதரகம் மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று அல்லது நாளை அவர் இலங்கை வர உள்ளார். இலங்கை வந்தவுடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.