இம்முறை கல்விப் பொதுத்தாரதர சாதாரணத்தரப் பரீட்சையில் முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களம் வெளியிடாது என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இந்தப் பொதுத் தேர்வில் போட்டி எதுவும் இல்லை. எனவே முதல் பத்து மாணவர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் இல்லை.
முதல் பத்து மாணவர்கள்
இந்தநிலையில் இந்த பெறுபேறுகள் உயர் படிப்புகளுக்கான ஆரம்பம் மாத்திரமேயாகும் என்றும் இதனை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் முதல் தடவையாக பரீட்சைக்குத் தோற்றிய 311,321 மாணவர்களில் 231,982 அல்லது 74.5 வீதமானவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
எனினும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் சற்று குறைந்துள்ளது.
அரசத்துறையில் பணி
இதேவேளை உயர்தரம் கற்கவிருப்போர் வேலை பெறுவதற்கு பொருத்தமான பாடங்களைத் தேர்வு செய்யுமாறு ஆணையர் மாணவர்களை வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் அரசத்துறையில் பணிகளில் சேர்வது மிகவும் கடினமான பணியாக இருக்கும்.
எனவே, மாணவர்கள் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு பெறும் வகையில், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி அடிப்படையிலான பாடங்களை புத்திசாலித்தனமாக தெரிவுசெய்ய வேண்டும் என்று ஆணையாளர் கோரியுள்ளார்.