பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது காதலி எனக்கூறப்படும் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று தாக்கிய, கடித்து துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர், காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய காலி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹொட்டலுக்கு அழைத்துச் சென்று தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர்
தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காலி பொலிஸ் பிரிவில் பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் இந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர், விடுமுறை பெற்று வீட்டுக்கு செல்வதற்காக காலி சமனல மைதானத்திற்கு அருகில் சென்றுள்ளார்.
அப்போது காதலர் எனக்கூறப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர் மோட்டார் சைக்கிளில் அந்த இடத்திற்கு வந்துள்ளதுடன் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் வேறு ஒருவருடன் காதல் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்துள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர், பெண்ணின் அலைபேசியை சோதனை செய்துள்ளார்.
அலைபேசியை பார்த்துக்கொண்டே பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை போத்தல் மற்றும் இடைப்பட்டியால் தாக்கி, கடித்துள்ளார்.
பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரின் 45 ஆயிரம் ரூபா பெறுமதியான அலைபேசியை தரையில் அடித்து உடைத்து விட்டு, ஹொட்டலில் இருந்து வெளியில் அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.