காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம” போராட்ட களத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 05 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் இன்று ( 9.12.2022) அறிவித்தது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் “கோட்டா கோ கம ” போராட்டத் களத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி லஹிரு சானக்க உள்ளிட்ட 05 சமூக செயற்பாட்டாளர்களால் இந்த 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.
உயர் நீதிமன்றம் அறிவிப்பு
மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றம் உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சனத் நிஷாந்த, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரை எதிர்வரும் 2023 ஜூன் 22 ஆம் திகதி நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்தது.
அமைதிப் போராட்டங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க உத்தரவு பிறப்பிக்கவும், அது தொடர்பிலான வழிகாட்டுதல்களை தயாரிக்கவும் பொலிஸ் மா அதிபருக்கு கட்டளை இடுமாறும் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் ஊடாக கோரப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதிக்கு எதிராக விசாரணைகளை நடத்த எதிர்பார்க்கவில்லை
அத்துடன் இந்த மனுவில் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அவருக்கு எதிராக விசாரணைகளை நடத்த எதிர்பார்க்கவில்லை என மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதன்படி முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை வழக்கு நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.