உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைத்தால் இலட்சக்கணக்கான மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு விதிகளை தந்திரமாகப் பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலட்சக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டி போராட்டம்
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு தேர்தல் தொகுதி அமைப்பாளர்களையும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களையும் தேடிக் கொள்வதற்கு முடியாமல் இருந்தால் அதற்கு எதிர்க்கட்சி பொறுப்பேற்க முடியாது.
எனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் அதற்கு எதிராக இலட்சக்கணக்கான பொது மக்களை ஒன்றுதிரட்டி ஜனவரி மாதம் தொடக்கம் வீதிக்கு இறங்கிப் போராடவுள்ளோம்.
அந்தப் போராட்டத்தை அரசாங்கத்தினாலோ அல்லது பாதுகாப்புப் படைகளினாலோ கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.