நச்சு மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட வேலைத்திட்டம்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நச்சு மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் இச்செயற்குழுவின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
போதைப்பொருள் பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு, போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களை அடையாளம் காணுதல், போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறையிலிருக்கும் கைதிகள்
போதைப்பொருளுக்கு அடிமையாகி தற்போது சிறையில் உள்ள கைதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிறைகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் முறையான சிகிச்சைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தன்னார்வ மையங்கள், சமூகம் சார்ந்த புனர்வாழ்வு, நன்னடத்தை சேவைகள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்பான மேலதிக கலந்துரையாடல்களும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.