ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு பதிலாக புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய இந்த வருட இறுதியில் பெருமளவான அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளனர்.
இந்த நிலையில் அரச ஊழியர்களை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகள்
இந்த குழுவில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், உள்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
60 வயதை பூர்த்தி செய்யும் அரச ஊழியர்களின் ஓய்வு காலத்தின் போது அரச சேவையில் ஏற்படும் பணியாளர் வெற்றிடங்கள் குறித்து கவனம் செலுத்தி, அதற்காக ஊழியர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான பரிந்துரைகளை இந்த குழு வழங்கவுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை குறித்த குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது