முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாட்டிற்குள் வர முயற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அமெரிக்க தூதுவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அமெரிக்கத் தூதுவர் இந்த செய்தியை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
குழப்பத்தில் கோட்டாபய குடும்பம்
இதன்போது முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் மனோஜ் ராஜபக்ச உட்பட முழு குடும்பமும் உடனிருந்ததாக அறியமுடிகின்றது.இந்த செய்தியினால் அவர்கள் அனைவரும் குழப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் டுபாய் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திருந்தார்.
கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவுக்குச் செல்வதற்காக பல தடவைகள் விசா கோரி விண்ணப்பித்திருந்த போதிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த கோரிக்கையை நிராகரிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருந்தது.