சபரகமுவை ஸ்ரீ மஹா சுமண சமன் ஆலயத்தின் காணிக்கை பணம் வைக்கப்படும் களஞ்சியத்திற்குள் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த காணிக்கை பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
கூரையை உடைத்து காணிக்கை களஞ்சியத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள்
கடந்த 8 ஆம் நள்ளிரவு கூரை மற்றும் இரும்பு வலையை உடைத்து களஞ்சிய அறைக்குள் புகுந்துள்ள கொள்ளையர்கள் குழு ஆலயத்திற்கு சொந்தமான நான்கு காணிக்கை பெட்டிகளில் சேகரிக்கப்பட்டு, சாக்கு பைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
இந்த காணிக்கை களஞ்சியம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எதிரில் 24 மணி நேரமும் இயங்கும் பொலிஸ் காவலரணும் உள்ளது.
பொலிஸாருக்கு மேலதிகமாக ஆலயத்தின் பாதுகாப்புக்கு காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 60 சீ.சீ.டி.வி கெமராக்கள் 24 மணி நேரமும் இயங்கி வரும் சூழலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பிரதேசவாசிகளுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்ற போது ஆலயத்தின் பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய பொலிஸார் வேறு பொலிஸ் நிலையங்களுக்கு கடமைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பாக இரத்தினபுரி பொலிஸ் அத்தியட்சகர் சேனக்க வீரசிங்கவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கடமையில் இருந்த பொலிஸாரை வேறு பொலிஸ் நிலையங்களுக்கு கடமைக்கு அனுப்பி விட்டு, வேறு ஒரு பொலிஸ் குழு காவலரணில் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இரத்தினபுரி சமன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே மீகார ஜயசுந்தர பண்டார, கடந்த ஒக்டோபர் 4 ஆம் மற்றும் 10 ஆம் திகதி பணம் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சியத்திற்குள் நுழைய கொள்ளையர்கள் முயற்சித்த போதிலும் இரண்டு முறையும் அவர்களால் அதனை செய்ய முடியாமல் போயுள்ளது.
இது தொடர்பாக இரத்தினபுரி பொலிஸாருக்கு அறிவித்து மேலதிக பாதுகாப்பை கோரிய போதிலும் இதுவரை அந்த பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.