கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வாசித்துக் காட்டியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் நோக்கி நகர்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நான்காம் இணைப்பு
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி நோக்க ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸார் தற்போது போராட்டக்காரர்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவினை அறிவித்து வருகின்றனர்.
மூன்றாம் இணைப்பு
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் திரண்டுள்ளனர்
எதிர்ப்பு கோசங்களை எழுப்பிய வண்ணம் அவர்கள் அங்கு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த போராட்டம் கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அங்கு பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து இரகசியமாக போராட்ட இடத்தை மாற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய பகுதிக்கு விரைவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்னும் சற்று நேரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வசந்த முதலிகேவை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும், மக்கள் வாழக்கூடிய சுமூகமான நிலையை ஏற்படுத்த கோரியும் இந்த ஆர்ப்படம் மேற்கொள்ளப்படவுள்ளது.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.