அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணங்களை திருத்தியமைக்க மறுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சரவை செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, 2009 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தின் பிரகாரம் காரணங்களை முன்வைத்து எழுத்துமூலம் இந்த முடிவை அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
அமைச்சரவையின் ஒப்புதல்
முன்னதாக ஜனவரி 09 அன்று, மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டுதல்களைத் திருத்துவதற்கும், ஜனவரி 2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும் செலவை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, இந்த திருத்தம் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் கட்டணம் மீளாய்வு செய்யப்பட திட்டமிடப்பட்டது.
இதேவேளை கட்டணச் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொருத்தமான முன்மொழிவு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்று அமைச்சு தெரிவித்துள்ளது.