நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணத்தினால் தேர்தலை நிறுத்துவது சரி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
தேர்தலை நிறுத்துவது சரி என்பது என்னுடைய கருத்து. இந்த தேர்தல் தேவையற்றது. நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி மிக மோசமாக இருக்கின்றது.
தேர்தல் இப்பொழுது நடைபெற வேண்டுமா?
இந்த நிலைமையில் ஒரு தேர்தல் நடந்தால் மக்களிடையே ஒவ்வொருவருக்கிடையில் முரண்பாடுகளும், தமது பதவிகளிற்காக பிரிந்துகொண்டு போகின்ற தன்மையும் இந்த நாட்டிலே தற்பொழுது ஓரளவு நிலவும் சட்ட ஒழுங்கை கூட பாதித்துவிடும். அதை காட்டிலும் எத்தனையோ மில்லியன் தேவையாக இருக்கிறது.
நாட்டினுடைய பொருளாதாரம் சீர்கெட்ட நிலைமையில் பணத்தை இதில் கொட்ட வேண்டிய அவசியமில்லை. மாகாண சபை தேர்தலை நடத்தினால் பரவாயில்லை, ஏனெனில் மாகாணசபை என்று கூறும் போது, வடகிழக்கு மாகாணங்களுக்கு கிட்டதட்ட நான்கு வருட காலங்களாக எந்த வித செயற்பாடுகளும் இல்லாமல் இருப்பதால் அது அவர்களிற்கு நல்லது.
இவ்வாறான ஒரு தேர்தல் இப்பொழுது நடைபெற வேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. சில வேளைகளில் அது நிறுத்தப்படக்கூடும். ஆனாலும் நாம் எமது கடமைகளை செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் எமது கடமைகளை செய்துகொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்தார்