ஒரு நாடு வளர்ச்சி அடைவதற்கு பாலின சமத்துவமும், அறிவியல் வளர்ச்சியும் முக்கியமானது. இன்றைய காலத்தில் அறிவியலின் வளர்ச்சி என்பது வியப்பிற்குரிய ஒன்றாக எண்ணப்படுகிறது. பெண்களுக்கான சம உரிமையும் பெரும்பாலான நாடுகளில் சரியான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் உலக அளவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளில் குறிப்பிடத்தக்க பாலின இடைவெளி இருப்பதாக கூறப்படுகிறது.
உயர்கல்வியில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பெண்களின் முன்னேற்றம் குறைவாகவே இருக்கிறது. ஒரு சில நாடுகளில் அறிவியல் வளர்ச்சியில் பெண்கள் பெரும்பங்கு வகித்தாலும், இன்றளவிலும் பெரும்பாலான நாடுகளில் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருப்பதாக கருதப்படுகிறது. இதற்கான காரணம் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது. அமெரிக்காவில் 1960-1980-ம் ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டங்களை பெறும் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. மேலும் 1980-ம் ஆண்டில் இருந்து எதிர்பாராத கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சியை பெண்கள் அடைந்தனர்.
இந்த நிலையில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து குறைவாக இருப்பதாகவும், அதற்கு முந்தைய 25 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டதாவும் கூறப்பட்டது. இந்த நிலை மாற்றப்பட்டு பெண்களின் பங்களிப்பு அறிவியல் துறையில் ஆண்களுக்கு நிகராக இருக்க வேண்டும் என்று ஐ.நா.சபையில் ஆலோசிக்கப்பட்டது. எனவே ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது அனைத்து உறுப்பு நாடுகள், அமைப்புகளோடு இணைந்து அறிவியலில் பெண்களுக்கு சமமான சூழலை ஊக்குவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட வலியுறுத்தியது.
மேலும் பாலின சமத்துவம் மற்றும் பெண் அதிகாரம் ஆகியவற்றை அடைய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பெண்களின் சமமான அணுகலை ஊக்குவிப்பது அவசியம் என்று அங்கீகரித்துள்ளது. பாலின சமத்துவம் உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி நிலையான வளர்ச்சிக்கும், அனைத்து இலக்குகளில் முன்னேறுவதற்கும் முக்கியமான பங்களிப்பு வழங்கும் என ஐ.நா.சபை கூறியுள்ளது. இவ்வாறு பாலின சமத்துவத்தின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இன்றளவிலும் தொழில்நுட்ப துறையில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களை பெருமைப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11-ந் தேதி (இன்று) அறிவியலில் பெண்களுக்கான சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.




















