அரச நிறுவனங்களில் மின்னணு கட்டண வசதிகளை கட்டாயமாக்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு தொழிநுட்ப அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாதாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
கையால் எழுதப்பட்ட பற்றுச்சீட்டுகள்
தற்போது அரச நிறுவனங்களில் கையால் எழுதப்பட்ட பற்றுச்சீட்டுகள் வழங்குவதன் மூலம் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதியின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
எனினும் டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்குத் தேவையான தொழிநுட்ப வசதிகள் பல அரச நிறுவனங்களில் இல்லை என்பதை தொழிநுட்ப அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த விடயத்தில் தனியார் துறையில் தொழிநுட்ப முன்னேற்றங்கள் இருந்த போதிலும், அரச நிறுவனங்கள் அபிவிருத்தியை ஏற்றுக் கொள்ளவில்லை.
அரச நிறுவனங்களுக்கான தொழிநுட்ப வழிகாட்டல்
இலத்திரனியல் கொடுப்பனவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரச நிறுவனங்களுக்கான தொழிநுட்ப வழிகாட்டல் ஜூலை மாதம் முதல் நீடிக்கப்படவுள்ளது.
அதன்படி இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் இந்த முயற்சியை அதிகாரபூர்வமாக தொடங்கவும், அடுத்த வருடம் மார்ச் முதலாம் திகதிக்குள் அனைத்து அரச நிறுவனங்களிலும் இந்த கட்டாய நடைமுறையை முழுமையாக செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியை மேற்பார்வையிட நிதி அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களின் உயர்மட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.