இனப்படுகொலை செய்கின்ற சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கின்ற வேலைகளைச் செய்கின்ற அங்கஜன் இராமநாதன், தங்களை நோக்கி கேள்வி எழுப்புவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத் தினத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆடைகளைக் கிழித்து சிறைக்குச் சென்று ஒரு நாடகமாடியிருந்ததாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஊடகங்கள் நேற்றைய தினம் (16.02.2023) எழுப்பிய கேள்விக்கே செ.கஜேந்திரன் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த 30 வருடங்களாகக் காட்டிக்கொடுக்கின்ற வேலையைச் செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
பாரிய மோசடி
அத்துடன், தேசியத்தலைவர் பிரபாகரனின் நேரடி வாழிகாட்டலின் கீழ் 2001ஆம் ஆண்டு தொடக்கம் விடுதலைக்கான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்தியிருந்தோம்.
கடந்த 13 வருடங்களாகத் தெருவில் நின்று மக்களுக்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே போராடுவதாகச் சுட்டிக்காட்டிய செ.கஜேந்திரன், மக்கள் உரிய நேரத்தில் உரியப் பதில்களை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அங்கஜன் இராமநாதன் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இனப்படுகொலை செய்கின்ற சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கின்ற வேலைகளைச் செய்கின்ற அங்கஜன் இராமநாதன், தங்களை நோக்கி கேள்வி எழுப்புவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை. அவர் எதிர்காலத்தில் எந்தளவு தூரம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.