பிரித்தானியாவில் ஷாம்பெயின் பாட்டிலைக் கொண்டு தந்தையைக் கொன்ற இந்திய வம்சாவளி சேர்ந்த நபர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள சவுத்கேட் பகுதியில் டீகன் பால் சிங் விக்(54) என்ற நபர் அவரது 86 வயதான தந்தை அர்ஜன் சிங் விக்-குடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அக்டோபர் 2021ல் ஏற்பட்ட குழப்பத்திற்கு பிறகு டீகன் பால் சிங் விக் வீட்டிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், 86 வயதான அர்ஜன் சிங் விக் தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதையும், அவரது மகன் டீகன் பால் சிங் விக்(54) நிர்வாணமாக 100 ஷாம்பெயின் பாட்டில்களுக்கு மத்தியில் கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 100 ஷாம்பெயின் பாட்டில்களில் இரத்தக் கறை படிந்த Veuve Cliquot மற்றும் Pollinger பாட்டில்கள் அடங்கும்.மேலும் கைப்பற்றப்பட்ட உடலின் பிரேத பரிசோதனை முடிவில், தலையில் ஏற்பட்ட பலமான அதிர்ச்சியே மரணத்திற்கான காரணம் என காவல்துறையினர் தெரிவித்தாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், முதலில் கொலை குற்றத்தை மறுத்த மகன் டீகன் பால் சிங் விக், விசாரணையின் இரண்டாவது நாளில் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
“நான் என் அப்பாவை கொன்றேன். இரத்தம் தோய்ந்த பொலிங்கர் ஷாம்பெயின் பாட்டிலால் நான் அவரை தலைக்கு மேல் அடித்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.மேலும் கோவிட் ஊரடங்கின் போது தான் மதுவுக்கு அடிமையானதாகவும், சம்பவம் நடைபெற்ற மாலை 500 மில்லி விஸ்கி குடித்து இருந்ததையும் ஒப்புக் கொண்டார்.
தற்போது இந்த கொலை குற்றத்தை விசாரித்த நீதிமன்றம் மகன் டீகன் பால் சிங் விக்-க்கு குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.