கிளிநொச்சியில் 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வசிக்கும் ஓர் குடும்பத்தினரின் வீட்டை,வெளிநாட்டு பிரஜை ஒருவர் இடித்து தரைமட்டமாக்கியுள்ளார்.
குறித்த சம்பவம் கிளிநொச்சி பரந்தன் 3ஆம் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது.
காணி பிரச்சினை
பல வருடங்களாக குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பத்தினரை, ஜேர்மனியில் இருக்கும் ஒருவர் ஜே.சி.பி வைத்து அவர்களது வீட்டை இடித்து தரைமட்டமாகியது மற்றுமன்றி குடும்ப உறுப்பினர்களை மதுவிற்கு அடிமையானவர்களின் உதவியுடன் கடத்தி அவர்களை அடித்து மிரட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய சம்பவ இடத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ் யுவராஜா பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
“இந்த குடும்பத்தினர் காலையில் எனது அலுவலகம் தேடி வந்து அவர்களுடைய காணி பிரச்சினை தொடர்பில் முறைப்பாடு முன் வைத்தனர்.
ஜேர்மனி நாட்டை சேர்ந்த ஒருவர் இவர்களது வீடு இருந்த காணி அவருடையது என கூறி இந்த குடும்பத்தினரின் வீட்டை இடித்து உடைத்து அவர்களின் குடும்ப உறுப்பினரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இப்போது இந்த காணி யாருடையது என்பதை பற்றி நான் பேச வரவில்லை.
காணி இவர்களுடையதா? இல்லை அவருடையதா? என்பது வேறு ஆனால் நாட்டில் பொலிஸ் அதிகாரிகள்,சட்டம்,நீதிமன்றம் என அனைத்து நடைமுறைகளும் இருக்கும் போது யாரோ ஒரு வெளிநாட்டு பிரஜை தனி நபராக இருந்து அவர் தனது சுய விருப்புக்கமைய ஒரு வீட்டை இடித்து குடும்ப உறுப்பினர்களை அடித்து துன்புறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
நீதி வேண்டும்
இந்த விடயத்தை அவர் சட்டப்படி அனுகி இருக்க வேண்டும்.பொலிஸ் நிலையத்தை நாடி முறைப்பாடு செய்து, நீதிமன்ற உத்தரவின் பின்னரே இவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதைவிடுத்து ஒரு நடுத்தர குடும்பத்தினரை இவ்வாறு துன்புறுத்தும் செயற்பாட்டை இலங்கை பொலிஸாரும், நீதிமன்றமும் வண்மையாக கண்டிக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி குறித்த ஜேர்மன் பிரஜையின் செயற்பாட்டை தண்டித்து அந்நாட்டு தூதரகம் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் சட்டங்கள் இருக்கும் போது சாதாரண குடும்பங்களை புலம்பெயர்ந்த ஒருவர் இவ்வாறு பணத்தை வைத்துக்கொண்டு தனது எண்ணம்போல் துன்புறுத்தும் செயற்பாட்டை வண்மையாக கண்டிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் உரிய முறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.எனவே அவர்களுக்கான நீதியை இலங்கை சட்டமும் பொலிஸாரும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.”என கூறியுள்ளார்.