பூஜை செய்யும் பரிகாரி ஒருவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே நேற்று (20) தீர்ப்பளித்துள்ளார்.
இச் சம்பவம் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை
10 வருடங்களுக்கு முன்னர் இந்தக் குற்றத்தை பிரதிவாதி செய்ததற்கு நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லையென்றாலும் DNA மாதிரிகள் ஊடாக சுட்டிக்காட்டிய நீதிபதி சந்தேகத்திற்கு இடமின்றி பிரதிவாதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்டுள்ளதால் மேற்படி தண்டனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணையில் சம்பவத்துக்கு இலக்கான பெண் தனது காதலனுடன் திருமணத்தை வெற்றிகரமாக நடத்தும் பூஜைகளில் ஈடுபட சென்றுள்ள போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு நேரில் கண்ட சாட்சிகள் இல்லை என்றும் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் இல்லையென்றாலும் குற்றம் சாட்டப்பட்டவரின் DNA மாதிரிகள் இளம் பெண்ணிடம் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டதை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ரூபாய் 10,000 அபராதம் விதித்த நீதிபதி அபராதத்தை செலுத்தாவிடின் மேலதிக 06 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.



















