வனலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான முன்னேற்றக் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் (22.02.2023) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸவரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி செயலகத்தின் சமூக விவகார பணிப்பாளர் நாயகம் இந்த விடயம் தொடர்பில் ஆராய எமது மாவட்ட செயலகத்திற்கும் மற்றும் கள விஜயத்தையும் மேற்கொண்டிருந்தார். அதனுடைய தொடர்ச்சியான நடவடிக்கையாக இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டிருந்தது.
அபிவிருத்திக்கான காணிகள்
குறிப்பாக, வனலாவிற்குட்பட்டதான காணிகள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குப்பட்டதான காணிகள் பொதுமக்கள் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற காணிகள் மற்றும் எதிர்வரும் காலங்களில் அபிவிருத்திக்குத் தேவையான காணிகள் என அடையாளம் காணப்பட்ட காணிகள் என்ற அடிப்படையிலே அவற்றினை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்தான் தொடர்ச்சியாக இடம்பெற்ற வருகின்றது.
அந்த வகையில் எங்களுடைய மாவட்டத்திலே கிட்டத்தட்ட 5764 ஏக்கர் அளவிலான காணியை இரண்டு திணைக்களங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
குறிப்பாக மக்களுடைய வதிவிடம் மற்றும் பயிர்ச்செய்கைக் காணிகள் மற்றும் ஏனைய அபிவிருத்திக்கான காணிகள் என இந்த விடயங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் தலைமையிலும் இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது. அதேவேளையில் ஜனாதிபதி செயலகத்தினாலும் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் மூலமாக மக்களிற்கு அந்த காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச செயலாளர்கள், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வலாகா திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.