இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலம் முன்பாக, தமிழர் ஆதரவுக் குழுவான மே 17 இயக்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்குள், தரங்கம்பாடி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தமிழக கடற்றொழிலாளர் மீதான வன்முறையை இலங்கை நிறுத்த வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அரசுடன் இந்திய இராணுவம் இணைந்து தமிழக கடற்றொழிலாளர் மீதான தாக்குதலை ஊக்குவிக்கிறது. இந்தநிலையில் இந்திய அரசு இதனை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தவே இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை முற்றுகையிட்டதாக திருமுருகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பில், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்திய அரசை கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நோக்கி செல்ல முற்பட்ட போது, காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.