நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வழிவகைகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டத்தில் அதன் தலைவராகப் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும்வகையில் அரசாங்கத்தின் மேலதிக வருவாயைத் திரட்டுவதற்கும், அரசாங்கத்தின் செலவீனங்களைக் கருத்தில் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கான அதிகாரங்கள் பல இந்தக் குழுவுக்கு காணப்படுவதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த வருடத்துக்கான வரவுசெலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கும், அரசாங்கத்தின் வருமானங்களை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்த விடயங்களை எதிர்காலத்தில் குழுவில் விரிவாக ஆராய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு போன்ற சகல நிலையியற் குழுக்களின் விடயதானங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படாத வகையில் குழுக்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து இந்தக் குழுக்களின் தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பது அவசியம் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பில் அனைத்துக் குழுக்களின் தலைவர்களும் சபாநாயகரைச் சந்தித்துக் கலந்துரையாடவிருப்பதாகத் தலைவர் குறிப்பிட்டார்.