சாப்பாட்டில் முடி விழுவது என்பது சாதாரண விஷயம் அல்ல! சமைக்கும் பொழுது எப்பொழுதாவது இந்த மாதிரி நடப்பது உண்டு. இதற்கு நம் முன்னோர்கள் சில பலன்களும் கூறி வைத்தது உண்டு. அந்த வகையில் சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் முடி இருந்தால் என்ன அர்த்தம்?
சமைக்கும் பொழுது பொதுவாக கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தலைமுடியை விரித்துக் கொண்டு சமைப்பது கூடாது. தலையை சொரிந்து கொண்டே சமைப்பதும் கூடாது. சிறிய சிறிய ஹோட்டல்கள் முதல் மிகப்பெரிய உணவகங்கள் வரை அனைத்து இடங்களிலும் சமைக்கும் பொழுது தலையில் தலை கவர் அணிந்து சமைக்க வலியுறுத்தப்படுகிறது இதனால் தான்!
சமையல் செய்யும் பொழுது இது போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் தலைமுடி சமையலில் விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இது இயல்பாக நடக்கும் ஒரு விஷயம் தான் என்றாலும் கவனிக்கத்தக்கது ஆகும். தெரியாமல் முடியுடன் சாப்பிட்டு விட்டால் வயிற்று கோளாறுகள் பல ஏற்பட்டு அவதிப்பட நேரிடும். தொடர்ந்து இது போல் நடப்பதை ஜோதிட ரீதியாக சனி தோஷத்துடன் ஒப்பிடப்படுகிறது.
தலைமுடி சனியுடன் தொடர்புடையது ஆகும் எனவே சாப்பாட்டில் அடிக்கடி தலைமுடியை காண நேர்ந்தால் உங்களை சனி கிரகம் துரத்துகிறது என்று அர்த்தம். சனி பகவானால் நிறைய பிரச்சனைகள் வரப் போகிறது. கெடுதல்கள் துவங்கப் போகிறது என்பது அர்த்தமாகிறது. அது மட்டும் அல்லாமல் சாப்பாட்டில் சிலருக்கு கற்கள் கூட வருவது உண்டு.
சமைக்கும் உணவில் கற்கள் இருப்பது முறையல்ல! இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் மன உளைச்சலையும் ஏற்படுத்தும். அரிசி, பருப்பு போன்றவற்றை புடைக்கும் பொழுது இத்தகைய கல், குருணையை நீக்கிவிட்டு தான் சமைக்க பயன்படுத்துகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் கற்கள் வர நேர்ந்தால் சனி கிரகத்தின் உடைய தாக்கம் அதிகமாக இருப்பதாக அர்த்தமாகிறது.
யாருடைய உணவில் இது போல கற்கள், முடிகள் போன்றவை வருகிறதோ, அவர்களுக்குத் தான் இந்த சனி தோஷம் பீடித்து இருக்கிறது. எனவே நீங்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள். இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் உடனே சனி பகவான் சந்நிதிக்கு சென்று கருப்பு வஸ்திரம் ஒன்றை அவருக்கு சாற்றி விட்டு வாருங்கள்.
அது மட்டும் அல்லாமல் ஊனமுற்றவர்களை கேலி செய்பவர்கள், பெற்றோர்களை அவமதிப்பவர்கள், வீட்டில் பெண்களை இழிவு படுத்துபவர்கள், பணத்தை ஏமாற்றுபவர்கள், கெட்ட வார்த்தைகளை வீசுபவர்கள், வாயில்லா ஜீவராசிகளை துன்புறுத்துபவர்கள், நாய்களை கை கொண்டு அடிப்பவர்கள், மது அல்லது மாமிச பழக்கம் உள்ளவர்கள், சனியனே என்ற வார்த்தையால் திட்டுபவர்களை சனி பகவான் விட்டு வைப்பதே கிடையாது. எத்தகையவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கியே தீருவார்.
இவர்கள் சனி தோஷத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சனிக்கிழமைகளில் மது, மாமிசம் அருந்தக்கூடாது. மேலும் வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணையால் எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தாலே பல பிரச்சினைகளில் இருந்து விடிவு காலம் பிறக்கும்.