காலி முகத்திடல் போராட்டத்தில் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட புத்தி பிரபோத கருணாரத்ன என்ற இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
போராட்ட களத்தில் முன்னணியில் நின்று போராட்டத்திற்கு பலமாக விளங்கிய இந்த சிங்கள இளைஞன், கடிதம் மூலம் கடைசி ஆசையை குறிப்பிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இறப்பதற்கு முன் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவை
“நாளைய தினம் நான் தனியாகவாவது வீதிக்கு இறங்குவேன். இவர்களுடன் கத்தி கூச்சலிட்டு பிரயோஜனம் இல்லை. முடியுமானவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளி இறங்கி தனியாகவாவது போராட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புத்தி பிரபோதாவின் திடீர் மரணம் குறித்து ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த அவரது முகப் புத்தகத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார். அவரது பதிவில்,
முதல் போராட்டக்காரர் மரணம்
‘ முதல் போராட்டக்காரர் மரணம்! காலி முகத்திடல் போராட்டத்தை ஆரம்பிப்பதில் முக்கிய பங்காற்றியவரும், கோட்டா கோ கிராமத்தின் ஸ்தாபக உறுப்பினருமான புத்தி பிரபோத கருணாரத்ன (முதல் போராட்டக்காரர்) தற்கொலை செய்து கொண்டார்.
கோட்டா கோ கிராமத்தில் முதல் சிறிய குடிசையை கட்டியவர் போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரே புத்தி பிரபோத. புத்தி பிரபோத கருணாரத்ன மே 9 தாக்குதலின் போது நாட்டைப் பற்றவைத்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
புத்தி பிரபோத கடந்த காலமாக மகிந்தவின் மரணத்திற்காக பிரார்த்தனை செய்தார். மகிந்த இறக்கும் வரை காத்திருந்தார்.
எனினும் அவர் நீண்டகாலமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அவர் மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
பின்னோக்கிப் பார்த்தால் மனநோயால் பாதிக்கப்பட்ட பலரால் காலி முகத்திடல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தின் மற்றுமொரு தலைவரான நிர்மணி லியனகே இதற்கு முன்னர் உயிரிழந்தார். அவர் கோட்டா கோ கமவின் முதலாவது கூடாரம் அமைப்பதற்குப் பங்களிப்புச் செய்தவர்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.